பெண்கள் மீதான பாதுகாப்பை வலியுறுத்தும் ஊர்காவற்றுறை சம்பவம்!

யாழ். ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மிகக் குரூரமான படுகொலையொன்று நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரின் மனைவியான 24 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண்மணி தனிமையில் இருந்த சமயமே இந்த மாபாதகச் செயலுக்கு முகம் கொடுத்துள்ளார்.

அவரது கணவர் வழமை போன்று நீதிமன்றத்திற்கு கடமைக்கு சென்ற பின்னர் இப்பெண்மணி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

இச்சமயம் வீட்டுக்கு வந்தவர்கள் இவர் தனிமையில் இருப்பதை அறிந்ததும் இக்கொடூரச் செயலை மேற்கொண்டுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க மாபாதகச் செயல்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இம்மாபாதக செயலை பழைய இரும்பு சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் இருவரே மேற்கொண்டனர் என்று இப்பெண்மணியின் வீட்டின் பின்பகுதியிலுள்ள வீட்டில் வசிக்கும் வாய் பேச முடியாத 12 வயது மதிக்கத்தக்க சிறுவரொருவர் சைகை மூலம் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டியுள்ளார்.

அப்பெண்மணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்து அவரது தங்க ஆபரணங்களும் கொள்ளையடித்து செல்லப்பட்டு இருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இம்மாபாதக படுகொலைச் சம்பவம் இந்நாட்டிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் முனனெச்சரிக்கையாக விளங்குகின்றது. இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும்.

ஏனெனில் பழைய இரும்பு மற்றும் பழைய பத்திரிகை சேகரிக்கும் தொழில் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்லாமல் முழுநாட்டிலும் இடம்பெற்று வருகின்றது.

இத்தொழிலில் ஆண்கள்தான் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீடு வீடாக சென்றே இத்தொழிலை மேற்கொள்கின்றனர்.

அதாவது பழைய இரும்பு மற்றும் பழைய பத்திரிகையைப் பெற்றுக் கொண்டு புதிய பிளாஸ்ரிக் பொருட்கள் வழங்குவதே இத்தொழிலின் அடிப்படையாகும்.

இது ஆரம்ப காலத்தில் இடம்பெற்றது போன்ற ஒரு பண்டமாற்றுத் தொழிலாகும்.பழைய இரும்பு மற்றும் பழைய பத்திரிகை சேகரிக்குத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இத்தொழிலின் நிமித்தம் வீடுகளுக்குச் செல்லும் போது பெரும்பாலும் வீட்டு மனையாள் மாத்திரம் தான் வீட்டில் இருப்பார்.

அச்சமயம் கணவர் தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளி-ன் நிமித்தம் வீட்டுக்கு வெளியே சென்றிருப்பார். அத்தோடு பிள்ளைகளும் பெரும்பாலும் பாடசாலைக்கோ அல்லது பகுதி நேர வகுப்புகளுக்கொ சென்றிருப்பர்.

அதன் விளைவாக மனையாள் வீட்டில் தனிமையில் இருக்க நேரிடுகின்றது.இதேவேளையில் வீட்டுக்கு வரும் பழைய இரும்பு சேகரிப்போர் பலவித ஆசை வார்த்தைகளைக் கூறுவர்.

அப்போது பெண்கள் , வீட்டில் பெறுமதியற்று ஒதுக்கப்பட்டுள்ள பழைய இரும்புப் பொருட்களுக்கு பெறுமதியான புதிய பிளாஸ்ரிக் பொருட்கள் கிடைப்பதாக கருதுகின்றனர்.

அதனால் பழைய இரும்புப் பொருட்களைக் கொடுத்து புதிய பிளாஸ்ரிக் பொருட்களைப் பெறுவதில் இவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் மூலம் வீட்டுப் பாவனைக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடிவதாகவும் கருகின்றனர். ஆனால் பழைய இரும்பின் உண்மையான பெறுமதியை பெரும்பாலான பெண்கள் அறிந்து கொள்வதில்லை என்பது வேறு விடயம்.

இவை இவ்வாறிருக்க, இந்த பண்டமாற்று வர்த்தக நடவடிக்கையில் கள்ளம்கபடமற்ற மனதோடு தான் பெண்கள் ஈடுபடுகின்றனர்.

ஆனால் பழைய இரும்பு சேகரிக்கும் தொழிலில் பெண்கள் மீதும் வெறித்தனம் கொண்டவர்களும் ஈடுபடவே செய்கின்றனர் என்பதை பெண்கள் மறந்து விடக் கூடாது.

இதற்கு ஊர்காவற்றுறை சம்பவம் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.அதன் காரணத்தினால் முன்பின் அறிமுகமற்றவர்கள் வியாபாரம் உள்ளிட்ட எந்த நோக்கத்தில் வந்தாலும் அவர்கள் தொடர்பில் விழிப்பாகவும் முன்னவதானத்துடனும் ஒவ்வொரு பெண்ணும் செயற்பட வேண்டும்.

அவ்வாறானவர்களை வீடுகளுக்குள் எடுப்பது தொடர்பிலும், அவர்கள் வீட்டு வாசலில் இருக்கும் போது கதவுகளைத் திறந்து வைப்பது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அவர்கள் வீட்டு வாசலில் இருக்கும் நிலையில் வீட்டின் பின்பகுதிக்குச் சென்று இரும்பு உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பதும் பாதுகாப்பான செயல் அல்ல என்பதையும் ஒவ்வொரு பெண்ணும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் வலியுறுத்துவதற்கு ஊர்காவற்றுறை சம்பவம் காரணமாக அமைந்து விட்டது.ஆகவே ஒவ்வொரு பெண்ணும் தத்தமது பாகுகாப்பு குறித்து அதிக விழிப்புடன் செயற்பட வேண்டிய காலமிது.

ஏனெனில் இன்று பழைய இரும்பு சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் மாத்திரமல்லாமல் முன்பின் அறிமுகமற்றவர்களும், கழுத்துப் பட்டி அணிந்து வாட்டசாட்டமானவர்களும் கூட வியாபாரத்திற்காக வீடுகளுக்கு நேரில் வரும் காலமிது என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம்.