இலங்கை அரசியலின் உள்ளுராட்சி துறையில் 1.8 வீதமான பெண்களே உள்ளதாகவும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தில் தமிழ் பிரிவுக்கான இணைப்பாளர் மு.கிருத்திகா இதனை தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக பெண்களுக்கு அரசியலில் 25 வீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசதுறையாக இருக்கலாம் தனியார் துறையாக இருக்கலாம் அனைத்து துறைகளிலும் தனது திறமையினை வெளிப்படுத்திவருவதை நாங்கள் காணமுடியும்.
ஆனால் பெண்களால் ஒதுக்கப்பட்ட ஒரு துறையாக அரசியல்துறை காணப்படுகின்றது. இலங்கையில் உள்ள அரசியல் நிறுவனங்கள் அனைத்திலும் பெண்களின் பங்களிப்பானது மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டு 85 வருடங்களை இன்று கடந்துள்ள நிலையில், அந்த வாக்குரிமையூடாக ஆண்களுக்கு சமனாக பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதன் ஊடாக பாராளுமன்றம் செல்லும் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது. தொடர்ச்சியாக 5.8 வீதமான பெண்களே அரசியலில் பங்களிப்பினை செய்துவருவதை காணமுடிகின்றது.
இலங்கையின் பாராளுமன்றத்தில் 13 பெண் பிரதிநிதிகள் மட்டுமே உள்ளனர். மாகாணசபைகளில் வெறும் 3.8 வீதமே பெண்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.
பெண்களின் அரசியல் பங்களிப்பானது உயர்ந்த மட்டத்தில் இருந்து பார்க்கும்போது கீழ் மட்டம் வரையில் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
உள்ளுராட்சி மன்றங்களை பார்த்தால் அந்த நிலை இன்னும் கவலைக்கிடமாகவுள்ளது.1.8வீதமே பெண்கள் காணப்படுகின்றனர்.
பெண்களுக்கு மிக அண்மையில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டிய தேவையுள்ளது. இந்த நிலையிலேயே அரசியலில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
2016 இலக்கம் 01 திருத்த சட்டம் ஊடாக பெண்களுக்கு அரசியலில் 25வீத ஒதுக்கீட்டு முறையினை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
அது தொடர்பில் அறிவுறுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பிலான விழிப்பூட்டல்கள் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.