இன்று குடியரசு தின விழா: முதன் முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர்!!

நாட்டின் 68-ஆவது குடியரசு தின விழா தமிழக அரசு சார்பில் சென்னை கடற்கரை சாலையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வீரதீரச் செயல்களுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அளிக்கவுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்த தினமான ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தமிழக அரசு சார்பில் விழா சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு மேடைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவுக்கான எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் விழா அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குடியரசு தின விழாக்களில் தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றி வைப்பதுதான் வழக்கம். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யா சாகர் ராவ், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஆகவே, தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடி ஏற்றும் வகையில் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவையொட்டி, முப்படை சார்பில் குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். அணிவகுப்பு மேடையில் இருந்தபடி அணி வகுப்பு மரியாதையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்பார்.

பின்னர், அவர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். அப்போது வானில் பறந்தபடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வாழ்த்து தெரிவிக்கப்படும்.

பின்னர் முப்படையினர் கையாளும் பீரங்கி, சிறிய போர் விமானங்கள், ஆயுதங்கள் போன்றவை ஊர்திகள் மூலம் மக்கள் பார்வைக்கு வரிசையாக கொண்டு வரப்படும்.

தமிழக காவல்துறை பிரிவுகளின் அணிவகுப்பும் நடத்தப்பட உள்ளது. வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணா பதக்கம், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்ச்சியின்போது முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பதக்கங்களையும் விழாவின்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கவுள்ளார்.