சகவீரர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் உசேன் போல்ட்டின் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பறிப்பு!!

ஊக்கமருந்து புகார் எதிரொலியாக 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மாதிரிகள் (ரத்தம் மற்றும் சிறுநீர்) மீண்டும் மறுபரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதில் பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற உசேன் போல்ட், அசபா பவெல், நெஸ்டா கார்டர், மைக்கேல் பிராட்டர் ஆகியோர் அடங்கிய ஜமைக்கா குழுவிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதில் நெஸ்டா கார்டர், ‘மெத்தில்ஹெக்சானாமைன்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவரின் தவறுக்காக தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா வென்ற தங்கப்பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பறித்துள்ளது.

‘மின்னல் வேக’ ஓட்டப்பந்தய வீரர் என்று அழைக்கப்படும் உசேன் போல்ட், 2008, 2012, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தலா மூன்று வீதம் மொத்தம் 9 தங்கப்பதக்கம் வென்று இருந்தார். அதில் ஒரு பதக்கத்தை இப்போது உசேன் போல்ட் இழந்திருக்கிறார்.