பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மென்னியின் மண்டை உடைந்தது!!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி அரைஇறுதிக்கு முன்னேறி இருந்தது. அரைஇறுதி போட்டிக்கு தயாராக வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான 28 வயதான ஜோ மென்னி தலையில் பலத்த காயம் அடைந்தார்.

சக வீரர் மைக்கேல் லம்ப் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக ஜோ மென்னியின் தலையை பதம் பார்த்தது. இதில் ரத்தம் வடிந்த நிலையில் கீழே சரிந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். முதல் கட்ட பரிசோதனையில், மென்னியின் மண்டை உடைந்து கசிந்த ரத்தத்தில் சிறிதளவு மூளையில் உறைந்து இருப்பது தெரியவந்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ அதிகாரி ஜான் ஆர்ஷார்ட் தெரிவித்துள்ளார்.

காயம் பெரியது தான். இருப்பினும் மென்னி நல்ல நிலையில் இருப்பதாக உணருகிறார். எனவே அவருக்கு ஆபரேஷன் தேவைப்படாது என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறினார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மென்னியின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.