தேவன் மறப்பதுமில்லை, கைவிடுவதுமில்லை!

ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.

இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.

ஏன் தெரியுமா?

‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.

‘நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’. (ஏசா.44:21)

தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை

‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்ப தில்லை’. (ஏசா.49:15)

ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.

ஆனால் இன்றைய சமுதாயத்தில் அப்படிப்பட்ட தாய் கூட தன் பிள்ளைகளை மறந்துவிடுகிறாள். தன் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளை அநாதையாய் விட்டுவிட்டு ஓடுகிறாள். அல்லது தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுகிறாள். அப்படிப்பட்ட கொடிய, அன்பில்லாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதேயில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.

ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.

உங்கள் பிரயாசங்களை மறப்பதில்லை

‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)

ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார்களே’.

பிரியமானவர்களே! நீங்கள் படுகிறபாடுகளை நம் தேவன் அறிந்திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.

மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது, அவர்களை உயிரோடே விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.

‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’. (யாத்.1:21)

பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.