சென்னையில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 75 பேர் மீது திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான நடுகுப்பம், அயோத்தியா குப்பம் அம்பேத்கர் பாலம், ரூதர் நகர், மீர்சாகிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் நடந்தேறின. இந்த வன்முறைகளின் போது போலீசாரே ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், குடிசைகளுக்கு தீ வைத்ததாக ஆதாரத்துடன் வீடியோக்கள் வெளியாகின.
ஆனால், இந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி ஏற்கனவே 215 பேரை போலீசார் கைது செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று ஐஸ் ஹவுஸ் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 25 பேரை போலீசார் பிடித்து வழக்கு போட்டுள்ளனர். அதே போன்று ராயப்பேட்டையில் உள்ள மீர்சாகிப் பேட்டையில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.