போர் வெற்றியைக் காட்டிக் கொடுக்கும் புதிய அரசியலமைப்புக்கான பணிகளை நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் துறைமுகங்கள், நிலங்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
நுகேகொடவில் நேற்று நடந்த கூட்டு எதிரணியின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நமது தலைவர்களுக்கு எந்தப் பக்கம் இழுத்துக்கொள்ளும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இனி அரசியலிருந்து ஓய்வு பெறுவோம் என்ற எண்ணத்தோடு ஜனவரி 9 ஆம் திகதி, காலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி மெதமுலனவுக்கு சென்ற என்னை, ‘ தற்போது உங்களுக்கு ஓய்வு இல்லை, மீண்டும் நீங்கள் வரவேண்டும்” என சொன்னது நீங்கள் தான்.
ஓய்வு பெறச் சென்ற என்றை மீண்டும் இழுத்து எடுத்தது, மைத்திரிபால சிறிசேன தான் என்பதை அவரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குகிறார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராக பெற்று கொண்ட போர் வெற்றியை காட்டிகொடுக்க ஆயத்தமாக உள்ளார்கள்.
இந்த வரலாற்று போர் வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டு மக்களிடமும் தலைவரிடமும் உள்ளது. எனவே காட்டி கொடுப்புக்கான, புதிய அரசியலமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதார நிலைமையை அறிந்து கொண்டுதான் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே
ஜனாதிபதி தேர்தலை நடத்தி, என்னுடைய சுயநலத்துக்காக தோல்வியடைந்ததாக கூறுகின்றார்கள்.
நான் அனைத்துலக நாடுகளிடம் கடன் பெற்று நாடு பொருளாதார ரீதியாக பாரிய பின்னடவை எதிர்கொண்டதால் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தேன் என்றால், எதற்காக நாடு கடனில் இருக்கும் போது ஆட்சிக்கு வந்தீர்கள்.
தற்போதைய தலைவர்கள் இதுபோன்ற விளக்கமற்ற கதைகளை தான் கூறிகொண்டு இருக்கின்றார்கள்.
அரசாங்க நிறுவனங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய ஆயத்தமாக உள்ளார்கள்.
இதுபோன்று கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலபரப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள்.
இந்த அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
துறைமுகங்கள் மற்றும் அரச நிறுவனங்களை வாங்க நினைப்பவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கின்றோம்.
இதுபோன்று அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களையும், வங்கியில் ஒரு பகுதியையும் கொள்வனவு செய்ய உள்ளார்கள்.
ஆனால் இவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் வாங்கிய அனைத்தும் பொதுமக்களின் உடமையாக்கப்படும் என்பது நிச்சயம் என்று அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.