நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதா என்பது குறித்து நாடாளுமன்றில் விவாதம் செய்ய முடியும் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பாரிய நிதி மோசடிகள், துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினை இந்த அரசாங்கம் நிறுவியது.
இந்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றில் விவாதம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட விரோதமானது என ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் எனவும் இது குறித்து நாடாளுமன்றில் தெளிவுபடுத்துமாறும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன அவைத் தலைவரிடம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அவைத் தலைவர், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சட்ட ரீதியான தன்மை குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்த முடியும் என கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட விரோதமானது என விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.