நாட்டின் நிலவி வரும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளன.
நீரில் மூழ்குதல் மற்றும் பலத்த காற்று காரணமாக நேற்று வரையில் மூன்று மரணங்கள் சம்பவத்துள்ளன.
மட்டக்களப்பு மன்முனை பிரதேசத்தில் நீரில் மூழ்கி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்து நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக ஒன்பது மாகாணங்களில் சுமார் எழுபத்து ஒரு லட்சம் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, மேல், தென், வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்கள் அதிகளவு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான காற்றினால் நான்கு வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதுடன், 106 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பில் நேற்றுடன் நிறைவடைந்த 72 மணித்தியாலங்களில் 236 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. 236 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது.
நட்டை அண்டிய கடற்பரப்பிலும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடி மின்னல் தாக்குதல் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களாக நாட்டில் கடுமையான வரட்சி நிலைமை நீடித்து வந்ததுடன் மழை வேண்டி பல்வேறு மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.