முன்னாள் இந்திய ஜனாதிபதியான அப்துல்கலாம் ஷில்லாங்கில் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதன் அவரை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேகாலயா ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் பாலியல் புகாரில் சிக்கி பதவி இழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சண்முகநாதனின் லீலைகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு 5 பக்க கடிதத்தை 100-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் ஆளுநர் மாளிகையை இளம்பெண்கள் விடுதியாக எப்படியெல்லாம் சண்முகநாதன் மாற்றி வைத்திருந்தார் என விவரித்திருந்தனர் ராஜ்பவன் ஊழியர்கள்.
அதேபோல் மக்களின் ஜனாதிபதியாக போற்றப்பட்ட அப்துல் கலாம் மறைவின் போது ஆளுநராக இருந்த சண்முகநாதன் நடந்து கொண்ட விதம் குறித்தும் குறித்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்த புகாரில், அப்துல்கலாமின் கடைசி நிமிடங்களில் தாமும் உடன் இருந்ததாக தொடர்ந்து சண்முகநாதன் பொய் கூறி வருகிறார். உண்மை அது இல்லை.
ஆனால் அப்துல்கலாமை பார்க்க அவர் செல்லாமல் படுக்கை அறைக்குப் போய்விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சண்முகநாதன் தூங்கிக் கொண்டிருந்தபோது பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவித்த பின்னரே மருத்துவமனைக்கு சண்முகநாதன் ஓடினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மக்களின் மதிப்புக்குரிய ஜனாதிபதியாக திகழ்ந்த அப்துல்கலாமை காப்பாற்ற ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் அக்கறை காட்டாமல் தூங்கப் போய்விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.