இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை: புதிய உத்தரவில் கையொப்பமிட்ட டிரம்ப்

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் வளாகத்தில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு நிர்வாகத்தில் அமெரிக்க ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் மாட்டிஸ் நேற்று பதவி ஏற்று கொண்டார்.

இவ்விழாவில் பங்கேற்ற அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கவும், தங்கி இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றவும் அதிகாரம் அளிக்கும் புதிய உத்தரவில் அங்கு கையொப்பமிட்டார்.

இந்த புதிய உத்தரவில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பாக வெளிப்படையான அறிக்கை அல்லது செய்திக்குறிப்பு எதையும் அதிபரின் வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை.

எனினும், கடந்த வாரம் அந்நாட்டு முக்கிய ஊடகங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டு தீவிரவாதியிடம் இருந்து நாட்டை பாதுகாத்தல் (Protection of the nation from foreign terrorist entry into the United States) என்னும் இந்த புதிய உத்தரவின் முக்கிய சாரம்சங்கள் என்ன? என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நிர்ணயிக்கப்படும் வரை, தற்போது, அந்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் அகதிகள் புணர்வாழ்வு திட்டம் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும்.

மேலும், அவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அதிபர் தீர்மானிக்கும் வரை சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி இல்லை.

அதேவேளையில், அவர்கள் சுற்றுலா பயணிகளாக இருந்தாலும், குடியேறிகளாக இருந்தாலும் இஸ்லாமிய நாடுகளான ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து வர அமெரிக்காவுக்கு வர முயற்சிப்பவர்களுக்கு, விண்ணப்பித்த 30 நாட்கள் வரை விசா வழங்கப்பட மாட்டாது.

மேற்கண்ட நிபந்தனைகள் தவிர இன்னும் பல அம்சங்கள் இந்த புதிய உத்தரவில் இடம் பெற்றுள்ளதாக முன்னர் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.