இங்கிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

மார்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

மூன்று 20 ஓவர் தொடரில் கான்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (29-ந்தேதி) நடக்கிறது.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது.

கான்பூர் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. சிறந்த அதிரடியை வெளிப்படுத்தவில்லை. தொடக்க வீரர் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்பட்ட மனிஷ் பாண்டேயை தொடக்க வீரராக ஆட வைக்கலாம். கேப்டன் வீராட் கோலி, டோனி மற்றும் ரெய்னா நல்ல நிலையில் உள்ளனர். யுவராஜ், ஹர்த்திக் பாண்ட்யா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை.

அஸ்வின், ஜடேஜா இல்லாததால் பந்துவீச்சு சற்று பலவீனமாக காணப்படுகிறது. யசுவேந்திர சகால் நேர்த்தியாக வீசினார். ஆனால் பர்வேஷ் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் சீனியர் சுழற்பந்து வீரரான அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

வேகப்பந்தில் ஆசிஷ் நெக்ரா, பும்ரா உள்ளனர். புவனேஸ்வர்குமாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமானால் இந்த இருவரில் ஒருவர் கழற்றிவிடப்படுவார்.

வெற்றி பெற வேண்டிய கட்டாயமான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது முழு திறனை வெளிப்படுத்துவார்கள்.

இங்கிலாந்து அணி நாளைய போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

கேப்டன் மார்கன், ஜோரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். மேலும் பந்து வீச்சிலும் இந்தியாவை விட முன்னேற்றமாக இருக்கிறது. மில்ஸ், ஜோர்டான், மொய்ன்அலி ஆகியோர் கான்பூர் போட்டியில் மிகவும் நேர்த்தியாக வீசினார்கள்.

டெஸ்ட், ஒருநாள் தொடரை இழந்து இருந்த இங்கிலாந்து அணிக்கு தற்போது 20 ஓவர் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதை அந்த அணி வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வேட்கையில் உள்ளனர். இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 10-வது 20 ஓவர் ஆட்டமாகும். இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 3 போட்டியிலும், இங்கிலாந்து 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.