நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

நல்லாட்சி  அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நிலைத்திருந்தால் எமது கலாசாரம், பண்பாடு சீரழியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே இந்த அரசாங்கம் வீடு செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக்கு எதிராக நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியினரின் பாரிய எதிர்ப்பு கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜி.எஸ்.பி. பிளஸ்-ஐ நாட்டிற்கு வழங்குவதற்காக விதிக்கப்பட்டுள்ள ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட நிபந்தனைகளை பார்த்து பிற நாடுகள் அச்சலுகை வேண்டாம் என்று ஒதுங்குகின்றன.

ஆனால் எம்மை பழிவாங்குவதாக எண்ணி அரசாங்கம் ஜி.எஸ்.பி. பிளஸ்-ஐ பெற்றுக் கொண்டுள்ளது.

இது மிகவும் ஆபத்தானது. நாம் எமது பிள்ளைகளை வழித்தவறிச் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எமது கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க வேண்டும்.

இவற்றை நோக்கும்போது இந்த அரசாங்கம் எப்பாதையை நோக்கி செல்கிறது என்பது தெளிவாகிறது. எனவே நல்லாட்சி எனும் போர்வையில் நாட்டை அழிக்கும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறே எம்முடன் இணைந்துள்ள இம்மக்கள் தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.