பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்த ரணிலே உண்மையான போர் வீரன்!

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் குற்றவியல் யுத்தம் எனவும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்து அந்த போரை நிறுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நாட்டில் இருக்கும் போர் வீரன் எனவும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

வரலாற்று வீரன் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் மகாவம்சத்தில் எழுதப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே விக்ரமபாகு கருணராட்ன இதனை கூறியுள்ளார்.

யுத்தத்தின் போது இலங்கை படையினர், சர்வதேச போர் சட்டத்திட்டங்களை மீறி தமிழ் மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலிகொட இது குறித்து ஆராய்ந்து வந்தார். போருக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக அவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

போரில் வீரர்கள் என சிலரை அடையாளப்படுத்துவது குறித்து வெட்கப்பட வேண்டும். போரில் வீரர்கள் இருப்பார்களாயின் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பிலும் வீரர்கள் இருக்க வேண்டும்.

பிரகீத் எக்நேலிகொடை சிங்களவராக இருந்தும் தமிழர்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படுவதை தேடிய வீரன் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.