ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டும் ஓபிஸ்? புகைச்சலில் போயஸ் கார்டன்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நெருக்கம் காட்டுவதாக நினைத்து போயஸ் கார்டன் கொந்தளித்து வருகிறதாம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக முதல்வர் நாற்காலியில் ஓ. பன்னீர்செல்வத்தை அமர வைத்தது மத்திய பாஜக அரசு. ஆனால் இதனை சகிக்க முடியாமல் தொடர்ந்து மன்னார்குடி தரப்பு இடையூறு கொடுத்து வருகிறது.

அதே நேரத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மறைமுகமாக திமுக தரப்பு ஆதரவு தந்து வருகிறது. தமிழக அரசுக்கு பெரிய அளவில் குடைச்சலைக் கொடுக்காமல் முட்டுக் கொடுத்து வருகிறது திமுக.

தமிழக சட்டசபை கடந்த திங்கள்கிழமை கூடிய போதுதான் போலீசார் சென்னை மீனவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். அப்போது சட்டசபையில் இருந்த ஸ்டாலின் இந்த விவகாரத்தை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் வேறு காரணங்களை சொல்லி ஆளுநர் உரையை புறக்கணித்தார்.

அதேபோல் போலீசார் வன்முறை தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்தார் ஸ்டாலின். அச்சந்திப்பிலும் கூட முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கான மன்னார்குடி கோஷ்டியின் நெருக்கடி குறித்து ஸ்டாலினிடம் ஆளுநர் மாளிகை பேசியதாம்.

இதையடுத்துதான் இதுவரை இல்லாத வகையில் குடியரசு தின நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் ஸ்டாலின் பங்கேற்றாராம். ஒட்டுமொத்த சென்னை மக்களுமே குடியரசு தின விழாவை புறக்கணித்தபோதும் ஸ்டாலின் கலந்து கொண்டதில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மகிழ்ச்சியாகிவிட்டதாம்.

சட்டசபையில் நேற்று கூட போலீசாரின் தடியடியைப் பற்றி பேசிய ஸ்டாலின், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சென்றதற்கு நன்றி தெரிவித்திருந்தார். போயஸ் கார்டனோ ஓ. பன்னீர்செல்வம் தங்களுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்க்கிறாரோ என்ற சந்தேகத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறதாம்.