வடக்கு மாகாணத்தில் பிளாஸ்ரிக் பைகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமி தினமான எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த விடயம் அமுலுக்கு வரும் என வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மாகாணத்தில் உள்ள அரச திணைக்கள அலுவலகங்களுக்கும் அறிவித்துள்ளார்.
தொடர்ந்தும் வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணம் இன்று எதிர்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் பிளாஸ்ரிக் கழிவு தலையாய பிரச்சினையாக உள்ளது.
பிளாஸ்ரிக் கழிவுகள், பிளாஸ்ரிக் பைகள், குவளைகள், தட்டுக்கள் போன்றவை பெருமளவில் குவிந்து பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இலங்கை அரசு 20 மைக்ரோன்கள் அல்லது அதற்குக் குறைவான தடிப்புக் கொண்ட பிளாஸ்ரிக் பைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், பயன்படுத்தவதற்கும் கடந்த 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கத் தேசிய சுற்றாடல் சட்டத்தின் படி 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் தடை விதித்துள்ளது.
இந்தச் சட்டத்தை மீறுவோர் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த அல்லது இரண்டு வருடத்துக்குக் குறையாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்.
எனினும், வடக்கில் இந்தத் தடை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.
எனவே, 20 மைக்ரோன்கள் அல்லது அதற்குக் குறைவான பிளாஸ்ரிக் பைகளின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் பயன்பாட்டுக்குமான தடை எதிர்வரும் பூமி தினமான ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணத்தில் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும்.
அன்றைய தினத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச திணைக்களங்கள், பூங்காக்கள், சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் பிளாஸ்ரிக் பாவனையை தவிர்க்கவேண்டும்.
மேலும்,எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும், ஒருநாள் பாவனைக்குரிய பிளாஸ்ரிக் குவளைகள், உணவுப் பெட்டிகள், தட்டுக்கள் போன்றவற்றையும் பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்கவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.