திருட்டு அரசுக்கு பதிலாக மாற்று அரசு அவசியம்!

ஊழல் மோசடிகளை உடன் நிறுத்தாவிட்டால், ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதியை சரியான முறையில் நிலைநாட்டக்கூடிய மாற்று அரசை

உருவாக்குவோம் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த அரசு திருடர்களைப் பிடிக்கவில்லை. திருடர்கள் தான் இந்த அரசைப் பிடித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்து ஊழல்வாதிகளைத் தண்டிக்கப் போவதாகக் கூறி வாக்குறுதியளித்து ஆட்சிப்பீடமேறிய இந்த அரசு வாக்குறுதியை மீறி நடப்பது மாத்திரமன்றி ஊழலில் ஈடுபடவும் செய்கின்றது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் திருட்டு தான் மத்திய வங்கி பிணைமுறி மோசடி. அதனைத் தொடர்ந்து ஊழல்கள் வெற்றிகரமாகத் தொடர்கின்றன.

மஹிந்த ஆட்சியில் ஊழல் புரிந்தவர்களைத் தண்டிப்பதை விட்டு விட்டு தானும் ஊழலில் ஈடுபட்டு வருகின்றது.

அத்துடன், ஆட்சிக்கு வந்து 02 வருடங்கள் கடந்துவிட்டன.

ஆனால், உருப்படியாக ஒரு திருடனையும் பிடிக்கவில்லை.

அது தொடர்பான அக்கறை இந்த அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதில் அரசியல் டீல் இருக்கின்றது. இது தான் உண்மை.

அப்படியென்றால், இது தொடர்பில் நீதியை நிலை நாட்டக்கூடிய திருடர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கக்கூடிய ஊழலை முற்றாக நிறுத்தக்கூடிய மாற்று அரசு ஒன்றை உருவாக்குவது தான் இதற்கான ஒரே வழியாகும். இதை நாம் இனிச் செய்வோம்.

மேலும், மக்களுக்கு இது தொடர்பில் பொறுப்பு உண்டு

. மாற்று அரசை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதைத் தவிர எமக்கு வேறு வழி இல்லை.

தவறினால் நாடு மிஞ்சாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.