இலங்கையின் சாதனை நத்தார் மரமா?இது கற்று தந்தது இதுவா?

இலங்கையில் இம்முறை நத்தார் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டதோ இல்லையோ, நத்தார் பண்டிகைக்காக தயாரிக்கப்பட்ட சாதனைமிக்க நத்தார் மரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, செய்திகளை முழுமையாக ஆக்கிரமித்திருக்க தவறவில்லை.

நத்தார் மரத்தினை உருவாக்கி காட்சிப்படுத்தவேண்டிய தினத்தில் நத்தார் மரம் காட்சிப்படுத்தபட்டிருந்த போதிலும், அது குறித்தகாலப்பகுதியில் அதன் வரைவுகளுக்கு அமைவாக தயாரிக்கபட்டதா? தரமானதா? அதன் செலவினங்கள் என்ன? வளப்பயன்பாடு எவ்வாறு இருந்தது / என்பனவற்றுக்கான விடைகள் இன்னும் தொக்கியே நிற்கின்றன.

இத்தகைய தொக்கி நிற்கின்ற கேள்விகளுக்கு, நத்தார் மரத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கவும், அவரது அமைச்சும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்பதுடன், குறித்த செயற்திட்டத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்த திட்டமிடல் குழுவும் ஆவணங்களில் திட்டமிட்டதுபோல, நத்தார் மரத்துக்கு உருவம் கொடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் சரியான தகவல்களை வெளிபடுத்த கடமைப்பட்டவர்களாகின்றனர்.

வெளியான செய்திகளின்படி, 2015-ம் ஆண்டு சீனாவில் உருவாக்கபட்ட 55 மீட்டர் உயரமான செயற்கை நத்தார் மரத்தின் சாதனையை முறையடிக்கும் விதமாக 100 அடி உயரம் கொண்ட நத்தார் மரத்தினை உருவாக்குவதே முதன்மைத் திட்டமாகவிருந்தது. ஆனாலும், இடைநடுவே ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, சுமார் 73 அடி உயரமான செயற்கை நத்தார் மரத்தையே உருவாக்க முடிந்தது.

அண்மைக்காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் யாவும் ஆவணங்களில் முன்மொழியப்படும்போது ஒருவகையாகவும், அது செயலாக்கப்படும்போது வேறுவகை வெளியீட்டை கொண்டவையாகவும் உள்ளமை வழமையாகிக்கொண்டு வருகிறது. இந்நிலைமைக்கு சாதனை நத்தார் மரமும் தப்பவில்லை.

இந்த தொடர்ச்சியான சம்பவங்கள் நிறைய விடயங்களை நமக்கு கற்றுத் தருகின்ற போதிலும், அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு எம்மை திருத்திக்கொண்டிருக்கிறோமா என்பது சிந்திக்க வேண்டியதே!

செயற்றிட்ட செயலாக்கலின்போது கருத்தில்கொள்ளவேண்டியவை

செயற்திட்ட முகாமைத்துவ செயல்பாடுகளின்போது, பெரும்பாலும், எல்லாவற்றையும் சரியாக தெரிந்துதான் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம் என்கிற மனப்பான்மையினை திட்டமிடுபவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

திட்டமிடலின்போது, புறக்காரணிகள் எவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிற பரந்த எண்ணத்துடன் திட்டமிடலை மேற்கொள்ளத் தவறிவிடுகிறார்கள். குறிப்பாக, திட்டமிடலின்போது, பரந்த பார்வை இருப்பதுடன், அதனது புறதாக்கங்களையும் ஆய்வு செய்வது அவசியமாகிறது.

நத்தார் மரம் தயாரிக்கும் செயற்திட்டத்தின்போதும், திட்டத்தினை ஆரம்பிக்கும்போதும் புறக்காரணிகளை ஆராய்ந்து அது தொடர்பிலான அனைத்து காரணிகளிலும் கவனம் செலுத்தியிருப்பின், இறுதியில் எது நடந்தாலும் திட்டமிட்டபடி நத்தார் தினத்துக்கு முன்னதாக 100 அடி உயரமான மரத்தினை எவ்வித தடைகளுமின்றி காட்சிப்படுத்தியிருக்க முடியும்.

செயற்திட்ட முகாமைத்துவம் தொடர்பில் போதிய அறிவின்மை

செயற்திட்ட முகாமைத்துவம் (Project Manangement) தொடர்பில் கல்வி கற்றோரும், அது தொடர்பில் அறிவினை உடைய பலரும், அதனை செயன்முறைப்படுத்துவதில் தவறிழைகிறார்கள்.

செயற்திட்ட முகாமைத்துவம் என்பது, தனியே வரைபுகளையும் , ஒழுங்குபடுத்தல் ஆவணங்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல.

மாறாக, அவற்றினை எவ்வாறு ஒழுங்குபடுத்தி, அவசர நிலைமைகளுக்கு ஏற்ப அதனை மீளமைத்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தலையும் உள்ளடக்கியதாக உள்ளது.

குறிப்பாக, உயரமான நத்தார் மரத்தினை அமைக்கும் செயற்திட்டத்தில், அதனை திட்டமிடும்போதே, இறுதிநாள் வரைக்குமாக வேலைகளை திட்டமிடாது இருந்திருப்பின், இடையிலே ஏற்பட்ட தடங்கல் நிலைமை ஒட்டுமொத்த திட்டத்தினை பாதித்திருக்காது.

இவ்வாறு திட்டமிடாததன் விளைவாக, இறுதிநேர வேலைகள் அதிகரித்து, மேலதிக அழுத்தத்தை வழங்கியதன் விளைவாக, உண்மையான திட்டப்பிரகாரம் கட்டி முடிக்கப்படவேண்டிய நத்தார் மரத்தின் அளவினை சடுதியாக குறைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதுடன், அலங்காரங்களுக்கும் போதியவகையில் நேரத்தினை செலவிட முடியாதநிலை ஏற்பட்டு இருக்கிறது.

அத்துடன், திட்டமிடல் முகாமைத்துவம் என்பது தனியே திட்டங்களை நடைமுறைபடுத்துவது மட்டுமல்ல இதற்க்கு மாறாக, தரம், தகவல் தொடர்பு, அக்கறையுடைய தரப்பினரை கையாளுதல், சுற்றுச்சூழல் நன்மைகள் என்பவற்றையும் திட்டமிட்டு முகாமைத்துவம் செய்யவேண்டும் என்பதனை இந்நிகழ்வு எளிதாக புரியவைத்திருக்கும்.

சிக்கலான செயற்திட்டங்களுக்கு, ஆரம்பம் முதலே முகாமைத்துவ திட்டமிடலை செய்தல்

சிக்கலான எந்தவொரு செயற்திட்டங்களின்போதும், ஆரம்ப திட்டமிடலின்போது எத்தகைய நிகழ்வுகளும் புறக்கணிக்கபடக்கூடாது. அப்போதுதான், எதிர்காலத்தில் எத்தகைய இடையூறுகள் எத்தகைய புறக்காரணிகளின் விளைவாக ஏற்படக்கூடும் என்பதனை அனுமானிக்க முடியும்.

அத்துடன் சிக்கலான செயற்திட்டங்களை நெகிழ்வுதன்மை கொண்டதாக தயாரிக்கவேண்டியது அவசியம்.

இல்லாவிடின், இத்தகைய திட்டங்களில் ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்தன்மை திட்டத்தை முழுமையாகவே பாதித்துவிடக்கூடும். இதுதான், இம்முறை நத்தார் உருவாக்க திட்டத்தில் இடம்பெற்று இருந்தது.

கற்கைகளின் அடிப்படையில், பாரம்பரிய திட்டமிடல் முகாமைத்துவமானது வெளியீடுகளை விரிவான செயல்முறைகளின் ஊடாக, திட்டமிட்டவகையில் நடைமுறைபடுத்தி வெற்றி காண்பதனை இலக்காகக் கொண்டது.

ஆயினும், தற்கால திட்டமிடல் முகாமைத்துவமானது, நெகிழ்வுத்தன்மை கொண்டதாக தகவல் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமடைவதன் மூலமாக இலக்கை அடைந்துகொள்ளக்கூடியனவாக உள்ளது.

அதுபோல, இத்தகைய திட்டங்களின் அடிப்படை வெற்றி, நெகிழ்வுத்தன்மையுடன், நேரம், கிரயம், தரம் , வளம் ஆகிய காரணிகளை உச்சமாக பயன்படுத்திக்கொள்ளுவதிலும் தங்கியுள்ளது.

செயற்திட்டத்தினை நிறுத்த நினைப்பதை தவிர்த்து, செயற்திட்ட ஆபத்தினை குறைக்க முயற்சி செய்தல்

நத்தார் மர உருவாக்கத் திட்டம் நமக்கு கற்றுத்தந்த மற்றுமொரு மிகப்பெரிய பாடம், எந்தவொரு திட்டத்தினதும் ஆபத்தினை அல்லது விளைவினை முன்கூட்டியே அறிந்திருக்கவேண்டும் என்பதே ஆகும்.

குறித்த விடயத்தில், ஏற்படக்கூடிய விளைவுகளை கண்டறிந்து, முன்கூட்டியே அதற்கான தீர்வை பெற்று இருப்பின், இலங்கையின் அடையாளமாக திட்டமிட்டபடியே நத்தார் மரத்தினை உருவாக்கியிருக்க முடியும்.

அப்போது, இவ் உலகுக்கு எத்தனை தடங்கல் வந்தாலும், திட்டமிட்டபடியே எதனையும் நடத்தி காட்டுபவர்கள் நாங்கள் என்பதனை காட்டியிருக்க முடியும்.

இது நம்தொடர்பில் கடந்தகாலங்களிலிருந்த தவறான பிம்பத்தை உடைத்தெறியும் வாய்ப்பாக இது மாற்றபட்டிருக்க கூடும்.

அனுபவத்தை பாடமாக எடுத்துகொண்டு முன்னேறிச் செல்லல்

இந்த செயற்திட்டத்தின் முடிவானது, தனியே நத்தார் மரத்தினை உருவாக்குதலை மட்டுமே அடிப்படையாக கொண்டிராத ஒன்று.

மாறாக, இனிவரும் காலங்களிலும் அரசோ, அமைச்சோ தான் நடைமுறைப்படுத்தவுள்ள செயற்திட்டங்களுக்கு கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவ பாடத்தினை வழங்குகின்ற ஒரு திட்டமாக எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

செயற்திட்டங்களில் பங்களிக்கப்படுகின்ற உழைப்பும் அவற்றின் வெற்றியும் நிச்சயமாக பாராட்டப்படவேண்டியவை ஆகும்.

ஆனால், அவற்றுடன் குறித்த செயற்திட்டங்களை இன்னும் திறமையாக முன்னெடுத்திருக்க எதை எல்லாம் செய்திருக்கவேண்டும் என்கிற விடயமும் ஆராயப்படுவது மிக முக்கியமானது ஆகும். இதன்போது, குறித்த செயற்திட்டத்தில் பங்களிப்பு செய்திருக்கக்கூடிய அனைத்து தரப்பினரது சாதக மற்றும் பாதக கருத்துக்களை பின்னூட்டமாக பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

அவ்வாறு பெறப்பட்ட பின்னூட்டங்களை அடிப்படையாக கொண்டு, திட்டத்தின் மேம்பாடு எவ்வாறனாதாக அமைந்திருக்கலாம் ? அல்லது அமைந்திருக்க வேண்டும் ? என்பதனை விவாதிக்க வேண்டும். விவாதிக்கப்படுகின்ற கருத்துக்கள் கூடவே, அது அடுத்த செயற்திட்டங்களுக்கு எவ்வாறு ஒரு அனுபவ பாடமாக இருக்கும் என்பதனையும் சொல்லித்தர வேண்டும்.

இல்லையேல், அடுத்தடுத்த செயற்திட்டங்களின் வெளியீடும் நத்தார் மரம்போல, நிச்சயிக்கப்பட்ட இலக்குக்கும், எட்டப்பட்ட இடத்துக்கும் நடுவே சிக்கி சின்னாபின்னமாகி போகக்கூடும்.