மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி திட்டம் இதோ!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் தற்போது இலங்கை மக்களிடையே அதிகரித்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எதிர்வரும் மாகாண சபை தேர்தல் அதில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில்,  அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடத்தில் ஒரே தினத்தில் நடத்தும் தீர்மானம் ஒன்றை அரசாங்கம் எடுக்க உள்ளதாக தெரியவருகிறது.

இறுதியாக 2014 ஆம் ஆண்டு ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தலும் 2012 ஆம் ஆண்டு கிழக்கு, வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்கள் பகுதியாக நடத்தப்பட்டன.

இதனடிப்படையில், கிழக்கு, வடமத்திய, சபரகமுவ மாகாணங்களின் பதவிக்காலம் இந்த வருடம் முடிவடையவுள்ளதுடன் அவற்றுக்கான தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி சபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு புதிய முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தலுக்கு அப்படியான யோசனை முன்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில், மாகாண சபைகளுக்கும் தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படை என கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது மாத்திரமல்லது சகல தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பில் தற்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பதவிக்காலத்திற்கு இடையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் தினத்தை முடிவு செய்வதன் மூலம் ஆட்சியில் இருக்கும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கை அறிந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மக்கள் குறித்து கூடிய கவனத்தை செலுத்தி செயற்படும் சந்தர்ப்பம் அனைத்து கட்சிகளுக்கும் கிடைப்பது சிறந்த விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை பகுதி பகுதியாக நடத்தியது. முழு அரச பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற முடியும் நிலைமை காணப்பட்டதுடன் பெருந்தொகை பணம் செலவிடப்பட்டது. மேலும் வன்முறைகளையும் அதிகளவில் காணமுடிந்தது.

அதேவேளை இந்த வருடம் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலும் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்படும் என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.