யாழ்ப்பாணத்தில் வீதி போக்குவரத்து பொலிஸாரின் முறையற்ற செயற்பாடு குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி ஒழுங்குகளை மதித்து செயற்பட வேண்டிய பொலிஸார், அதனை மீறும் வகையில் செயற்படுவது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
திருநெல்வேலி சந்தை பகுதியிலுள்ள வீதி சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரியும் போது, அதனை மீறி, போக்குவரத்து பொலிஸார் வீதியை கடந்து சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளன. இதனை தவிர்க்கும் வகையில் பிரதான சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டன.
யாழ். பிரதான சந்திகளில், வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் திட்டம், கடந்த வருடம் முதல் வீதி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதனை பின்பற்றி, போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் சட்டம், ஒழுங்கை மதித்து பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொலிஸார், இவ்வாறு வீதி ஒழுங்கை மீறி நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.