தீபாவின் அரசியல் பயணம் சசிகலாவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என தீபாவின் ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும், கட்சியின் அடி மட்ட தொண்டர்கள், சில நிர்வாகிகள் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் ஜெயலலிதாவின் இரத்த சொந்தமான தீபாவுக்கு தான் கட்சியில் உரிமை உள்ளது என கூறிவருகிறார்கள்.
தினமும் ஆயிரக்கணக்கான தீபாவின் ஆதரவாளர்கள் அவர் வீட்டு முன்னர் கூடி அவரை அரசியலுக்கு அழைக்கின்றனர். அவரும் தனது அரசியல் முடிவை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் திகதி அறிவிப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து தீபாவின் ஆதரவாளர் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், தீபாவின் அரசியல் பயணம், சசிகலா தரப்புக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆர் பிறந்தநாளின் போது அவர் சமாதியில் நுழைய தீபாவுக்கு முதலில் தடை போடப்பட்டது. பின்னர் தான் அவர் போனார்.
இது கூட மன்னார்குடி கோஷ்டியின் வேலையாக தான் இருக்கும். ஆனால் நாங்கள் நிச்சயம் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் எனவும் 24ஆம் திகதி நோக்கி ஆவலுடன் காத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையில் தீபாவின் வீட்டில் திரண்ட ஆதரவாளர்கள் தீபாவை சின்னம்மா, சின்ன புரட்சி தலைவி என கோஷம் போடும் வீடியோ வெளியாகி மன்னார்குடி கோஷ்டியை இன்னும் கடுப்பேற்றியுள்ளது.