இன்று 2-வது 20 ஓவர் ஆட்டம்: புதுமுக வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கான்பூரில் நடந்த 20 ஓவர் ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சிகரமாக தோற்று இருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழி தீர்க்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இங்கிலாந்தை வீழ்த்த முடியும். அந்த அணியின் ஜோர்டான் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்குவார்.

இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ராகுலின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. ஒரு நாள் தொடரில் அவர் 24 ரன்களே எடுத்தார். இதனால் அவர் நீக்கப்பட்டு புதுமுக வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் முதல் போட்டியில் ஆடிய வீரர்களே இடம் பெற்று இருப்பார்கள்.

இந்திய அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடனும், இங்கிலாந்து அணி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.