சிரியா மற்றும் இராக்கில் கோலோச்சும் ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் மேற்கொண்டுவரும் அதிரடி அறிவுப்புகளை உலக அரசியல் வட்டாரம் உன்னிப்புடன் கவனித்து வருகின்றது.
சமீபத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாண்மை கொண்ட 7 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்க செல்ல தடைவிதித்து உத்தரவிட்டார். இது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன் அல்லாமல் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிரியா இராக் நாடுகளில் கோலோச்சும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை 30 நாட்களுக்குள் அடியோடு அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்தை வகுத்து தமக்கு அளிக்க பாதுகாப்பு ஆலோசகர்களுக்கும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் ஒன்றிணைந்து புதுவகை திட்டத்தை வகுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இராக் குடிமக்களை அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுத்துவிட்டு ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க ராணுவம் எங்கிருந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறித்த உத்தரவை அமெரிக்க ராணுவம் நடைமுறைப்படுத்த முற்படும்போது இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பை அமெரிக்க சந்திக்க நேரிடலாம் எனவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசாக ஆட்சியின் துவக்கத்திலேயே டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளதால், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரானது அடுத்தகட்ட நகர்வை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.