இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 71(47) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே 30(26), கேப்டன் கோலி 21(15) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் மோர்கன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஒவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. புமரா அந்த ஓவரை வீசினார். 6 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்தார். நெக்ரா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதால் 1- 1 என்ற கணக்கில் தொடர் சமநிலை ஆகி உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த இருபது ஓவர் போட்டி பெங்களூரில் வருகின்ற 1-ந்தேதி நடைபெறவுள்ளது.
அபாரமாக பந்து வீசிய புமரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.