ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். ஏற்கனவே அவர் இரண்டு முறை முதல்வராக பொறுப்பு ஏற்று ஆட்சி நடத்தியுள்ளதால் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் ஏற்றுக்கொண்டனர்.
அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத்தான் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஏற்றுக்கொண்டாலும் அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக அவரது அண்ணன் மகள் தீபா வரவேண்டும், கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை ஏற்க வேண்டும் என்று பேனர் வைத்த கையோடு ஜெ. தீபா பேரவையும் தொடங்கியுள்ளனர். தினசரியும், பேருந்துகள், வேன்கள் மூலமாக சென்னைக்கு வரும் தீபா ஆதரவாளர்கள், தி. நகருக்கு வந்து தீபாவை சந்தித்து பேசுகின்றனர்.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள்
ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளன்று தனது அரசியல் முடிவை அறிவித்தார் தீபா. அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தன்னை யாராலும் தடுக்க முடியாது என்றும் தீபா கூறினார். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தீபா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் தொடக்கம்
தீபா தனது சுற்றுப் பயணத்தை திருச்சியில் வருகிற 5ஆம்தேதி தொடங்குகிறார். அப்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசனை நடத்து உள்ளாராம்.
இதேபோல் தமிழகம் முழுவதும் 6 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்யும்போது அந்த மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிய உள்ளாராம்.
தீபா தலைமையை ஏற்க உறுதி
சுற்றுப்பயணத்தின்போது தீபா கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகளிடம் விண்ணப்பம் ஒன்று வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு நிர்வாகியும் தாங்கள் அ.தி.மு.க.வின் கிளைக்கழகத்தில் எந்த பதவியை வகிக்கிறோம் என்பதை எழுதி, நான் இன்று முதல் தீபாவின் ஆதரவாளராக அவரது தலைமையை ஏற்று பணி செய்ய உறுதி ஏற்கிறேன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டுமாம்.
பாதுகாப்பு படை
தீபாவின் பாதுகாப்புக்காக அவரது தீவிர ஆதரவாளர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை தயாரித்து வழங்கும் பணி முடிந்துள்ளது. தீபா சுற்றுப்பயணம் செய்யும்போது இவர்கள் 30 பேரும் அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்களாம்.
ஜெ. பிறந்தநாளில் முக்கிய முடிவு
எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரசியல் முடிவை அறிவித்த தீபா, 6 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிய பின்னர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியன்று தனது புது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.