சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் விவாதங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு தொடர்பான விவாத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்தது. நாங்கள் அதனை நடத்திக் காட்டினோம் என்றார்.
மேலும் அவர் மூன்று நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு அந்த சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதை ஏன் மூன்று ஆண்டுகளாக நிறைவேற்ற முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த மூன்று ஆண்டுகளாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சியால்தான் தற்போது அது சட்டமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
சட்டசபையில் திமுக உறுப்பினர் மூர்த்தி ஜல்லிக்கட்டு தடை குறித்து பேசினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக காலத்தில் ஜல்லிக்கட்டு தடை நீக்க சட்டம் கொண்டு வந்தாலும் குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெறாததால் அதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. எனவேதான் பாரம்பரிய உரிமையை மீட்க குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றார்.
உடனே குறுக்கிட்டுப் பேசிய மு.க.ஸ்டாலின், மூன்று நாட்களில் அவசரச் சட்டத்தை நிறைவேற்றிய அரசு, மூன்று ஆண்டுகளாக ஏன் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி மேற்கொள்ளவில்லை என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், திமுக கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படவில்லை. அதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்தன் விளைவாக மூன்றே நாட்களில் வரலாற்று சிறப்புமிக்க அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது என விளக்கமளித்தார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக முதல்வருக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நடந்த காரசார விவாதத்தால் சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.