சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள்

எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில் குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ், சிங்கள மக்களுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதன் போது ஊடகங்களைச் சந்தித்துக் கருத்து தெரிவிக்கையிலையே அங்குள்ள சிங்கள மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பல வருடங்களுக்கு முன்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் குடியிருந்தோம். ஆனால் அன்றைய யுத்த சூழ் நிலைமைகள் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கின்றோம். அவ்வாறு இடம்பெயர்ந்து வேறு இடங்களிற்குச் சென்ற பின்னர் மீண்டும் எங்கள் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கே வந்து விடுவோம். அதே போன்று தான் நாங்கள் கடந்த 2010 ஆம் ஆண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்தோம்.

இங்கு நாங்கள் வந்து பல மாதங்களாக வீடு வாசல்கள் அற்ற நிலையில் தவித்தோம் பல பிரச்சினைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கினோம். அதே நேரம் இங்கிருக்கின்ற சில அரசியல் தரப்பினர்கள் எதிர்ப்புக்களையும் வெளியிட்டனர். ஆனால் அவர்கள் ஏன் அவ்வாறு எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை. அன்றைக்கு நாங்கள் இங்கு வந்த போது எதிர்த்தவர்களே இன்றைக்கு எமக்கு வீட்டுத் திட்டங்களை வழங்குகின்ற போதும் எதிர்க்கின்றனர்.

இவ்வாறு எதிர்ப்புக்களை வெளியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஐயா அவர்களை நாங்கள் சந்திக்க விரும்புகின்றோம். அவருடன் பல விடயங்கள் பேச வேண்டி இருக்கின்றது. அவரை எங்கள் இடத்திற்கு வருமாறும் அழைப்பு  விடுகின்றோம். அதே நேரம் நாங்களும் சென்று அவரைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம்.

இதனை விடுத்து எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது என்று கேள்வியெழுப்பியுள்ள சிங்கள மக்கள், அவ்வாறு எங்களை விரட்டினால் சிவாஜிலிங்கம் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும்.

ஆகவே எங்கள் நிலைமைகளையும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை. நாங்கள் இங்கு தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் என மூவின மக்களும் ஒன்றாக சந்தோசத்துடன் நிம்மதியாகவே வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறே தொடர்ந்தும் வாழ்வதற்கு நாங்கள் விரும்புகின்றோம்.

இதேவேளை எங்களுடைய சொந்த இடமான யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பில் இருந்த போதும் பல பாதிப்புக்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டோம். அவைகளைச் சொல்லில் அடக்க முடியாது. ஏனெனில் நாங்கள் யாழிலிருந்து அங்கு சென்றதால் தென்னிலங்கையில் இருந்தவர்கள் எங்களை புலிகள் போன்றும் சித்தரித்தார்கள்.

அதே போல் சொந்த இடத்திற்கு தற்போது வந்திருக்கின்ற போதும் இங்குள்ள அரசியல் தரப்பினர்களால் பாதிக்கப்படுகின்றோம். இவ்வாறு தான் எங்கள் நிலைமைகள் இருக்கின்ற போது தென்னிலங்கை சென்றால் அங்கும் பிரச்சினை வடக்கிற்கு வந்தால் இங்கு பிரச்சினை என்றதொரு நிலையில் இரு இடங்களிலும் ஒரு மிருதங்கமாகவே நாங்கள் பார்க்கப்படுகின்றோம். எனவே இந்த நிலை மாற வேண்டுமென அவர்கள் மேலும் தெரிவித்தனர்.