20 வருடமாக தமிழர்களின் உப்பைத் திண்டவர் கருணா இன்று தமிழர்களையே தூற்றுகிறார்!

விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு முகவரியை வழங்கியது விடுதலைப்புலிகள் அமைப்பாகும். தனது சுய இலாபத்திற்காக இனத்தை காட்டிக்கொடுத்து விடுதலைப்போராட்டத்தினை நசுக்கிய பின்பும் இன்னும் அவர் ஓயவில்லை என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், இழக்கப்பட்ட கல்வியை நாங்கள் மீளப்பெற்றுக்கொள்ளவும் எமது இனம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் எமது மாணவர்கள் சமூகத்தினையை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

கிழக்கு மாகாண கல்வி நிலையில் தமிழ் மக்கள் பெரும் வீழ்ச்சி நிலையில் சென்றுகொண்டுள்ளனர். கல்வியில் கிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ள நிலையில் அதிலும் தமிழர்கள் கடைசி நிலையில் உள்ளமையானது கவலைக்குரியதாகும்.

கடந்த கால சூழ்நிலையினை இன்னும் நாங்கள் சொல்லிக்கொண்டிருக்காமல் அனைவரும் இணைந்து கல்வி நிலையினை உயர்நிலைக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையெடுக்கவேண்டும்.துறைசார்ந்த கல்வியில் எமது சமூகத்தினை முன்கொண்டுசெல்லவேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் காணாமல்போன தமது பிள்ளைகளை கண்டுபிடித்துதருமாறு அவர்களின் உறவுகள் உண்ணாவிரதம் இருந்தபோது இந்த நாட்டின் பிரதமர் அவர்கள் தெரிவித்த கருத்தானது தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் வெட்கித்தலைகுனிய வைக்கும் கருத்தாகவே பார்க்கப்படவேண்டும்.

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் காணாமல்போக செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கள்ளத்தோணிகளில் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளதானது தமிழர்களை கேவலப்படுத்தும் கருத்தாகவே பார்க்கப்படவேண்டும்.

இன அழிப்பினை செய்த மகிந்த ராஜபக்ஸவை இன்றைய பிரதமர் காப்பற்றமுற்படக்கூடாது.கடந்தகால யுத்தத்தில் பெரும் அழிவுகளை எமது சமூகம் சந்தித்தது.

பல்வேறு வேதனைகளையும் சுமந்து நிற்கின்றனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நீலநிறம், ஐக்கிய தேசிய கட்சி பச்சை நிறம். அவர்கள் குணத்தினால் சிங்களவர் என்ற தமது எண்ணப்பாட்டினையே தமிழர்கள் மீது காட்டுகின்றனர்.

இந்த நல்லாட்சி தமிழ் மக்களுக்கு எந்த நல்ல விடயத்தினையும் காட்டவில்லை.இனியாவது ஒரு நிரந்தர தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20வருடகாலமாக போராடிய முரளிதரன் நுகேகொடை கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த முரளிதரன் அவர்களுக்கு முகவரியை வழங்கியதுவிடுதலைப்புலிகள் அமைப்பாகும். 20வருடமாக தமிழர்களின் உப்பை திண்டவர் இன்று தமிழர்களை தூற்றிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை தூற்றிக்கொண்டு தனது சுயஇலாபத்திற்காக இனத்தை காட்டிக்கொடுத்து விடுதலைப்போராட்டத்தினை நசுக்கிய பின்பும் இன்னும் அவர் ஓயவில்லை என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.