வடமாகாண முதலமைச்சர் கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநிலத்தில் மார்க்கம் மற்றும் பிறம்ப்ரன் நகர முதல்வர்களுடன் செய்து கொண்டுள்ள முறையே, முல்லைத்தீவு – வவுனியா நகரங்களுக்கான உடன்படிக்கை தொடர்பாக வடமாகாணசபை அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா? என முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பப்படவுள்ளது.
வடமாகாணசபையின் 83ஆம் அமர்வு நாளை கைதடியில் உள்ள வடமாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டத்தில் நடைபெறவுள்ளது. இந்த அமர்விலேயே எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேற்படி கேள்வியை முதலமைச்சரை நோக்கி எழுப்பவுள்ளார்.
இந்த கேள்வியில் அண்மையில் கனடா நாட்டுக்கு சென்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒன்றாரியோ மாநிலத்தின் மார்க்கம் மற்றும் பிறம்ப்ரன் நகரங்களின் முதல்வர்களுடன் முறையே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்கான ஒப்பந்தங்களை செய்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சரின் கனடா விஜயம் தொடர்பாக மாகாண அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதா..? மேற்படி உடன்படிக்கைகளின் வரைபு மாகாண அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்பிக்கப்பட்டு, அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டதா..?
அத்துடன், குறித்த உடன்படிக்கைகளின் பிரதிகளை மாகாணசபைக்கு சமர்பிக்க முடியுமா..? என 3 கேள்விகள் முதலமைச்சரை நோக்கி எழுப்பப்படவுள்ளது.