கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை தெரு நாய்கள் காருக்குள்ளேயே சிறை வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
இந்த தெரு நாய்களில் பல வெறி நாய்களாக மாறி பொது மக்களை கடித்து குதறி வருகிறது.
வெறிநாய் கடிக்கு இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று ஏராளமானவர்கள் நாள்தோறும் நாய் கடிக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளுக்கு குவிந்து வருகின்றனர்.
இதனால் அவைகளை கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து தெரு நாய்களை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் இந்த நடவடிக்கைக்கு மிருகவதை எதிர்ப்பு அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தெரு நாய்களை கொல்வது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தெரு நாய்களிடம் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சிக்கி தவித்த சம்பவமும் நடந்துள்ளது.
உம்மன் சாண்டி சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்றுவிட்டு ரெயில் மூலம் கோட்டயம் வந்தடைந்தார்.
இந்நிலையில் ஒரு ஹொட்டல் அருகே அவர் காரை நிறுத்தியதும் ஏராளமான தெரு நாய்கள் அவர் காரை சுற்றிவளைத்துக் கொண்டன.
சில நாய்கள் காரின் மீது ஏறி குரைக்க தொடங்கியது. அப்போது அந்த வழியாக வந்த சிலர் இதை பார்த்து விட்டு கல்வீசி நாய்களை விரட்டியடித்தனர்.
அதன் பிறகுதான் காருக்குள் இருந்தது முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி என்பது அவர்களுக்கு தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த உம்மன் சாண்டி, பிறகு தன்னை காப்பாற்றிய பொது மக்களிடம் நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.