வங்காளதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட்: இந்திய அணி இன்று தேர்வு

வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்டில் விளையாடுகிறது.

இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஐதராபாத்தில் நடக்கிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்பு அந்த அணி இந்திய ‘ஏ’ அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் (5 மற்றும் 6) விளையாடுகிறது.

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி தேர்வு இன்று நடக்கிறது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வு குழு 15 வீரர்களை அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீர்ப்பர்கள் விருத்திமான் சகா, பார்த்தீவ் படேல் ஆகிய இருவரும் இடம் பெறுவார்கள்.

அணியின் முதன்மை விக்கெட் கீப்பரான சகா இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டுக்கு பிறகு காயம் அடைந்தார். இதனால் எஞ்சிய டெஸ்டில் பார்த்தீவ் பட்டேல் இடம் பெற்றார்.

தற்போது சகாவும் உடல் தகுதி பெற்று நல்ல நிலையில் இருக்கிறார். பார்த்தீவ் பட்டேலும் முத்திரை பதிக்கும் வகையில் உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார்.

அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் சகாதான் என்று சமீபத்தில் தேர்வு குழு தலைவர் தெரிவித்து இருந்தார். இதனால் அவரும், பார்த்தீவ் பட்டேலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

தோள்பட்டை காயத்தில் இருந்து குணமடைந்த ஆர்.அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய் மற்றும் கருண் நாயர், ஜெய்ந்த் யாதவ் ஆகியோர் டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார்கள்.

கைவிரல் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக கடைசி 2 டெஸ்டில் விளையாடாத ரகானே டெஸ்ட் அணிக்கு மீணடும் திரும்புவார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் அவர் இடம் பெறுவது சவாலானது. ஏனென்றால் அவர் இடத்தில் விளையாடிய கருண்நாயர் டிரிபிள் சதம் அடித்து முத்திரை பதித்தார்.

இதே போல் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி உடல் தகுதியுடன் இல்லாததால் நீக்கப்படுவார். மேலும் சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ராவும் கழற்றி விடப்படுவார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிராக 4-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

இந்திய அணி தொடர்ச்சியாக 18 டெஸ்டில் தோற்றது இல்லை. இதில் 14-ல் வெற்றி கிடைத்தது. 4 டெஸ்டில் ‘டிரா’ ஆனது. வங்காளதேசத்துக்கு எதிராகவும் இந்தியா வென்று இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் விவரம்:-

விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், முரளி விஜய், புஜாரா, ரகானே, கருண் நாயர், விருத்திமான் சகா, பார்த்தீவ் பட்டேல், ஆர்.அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார்.