மைத்திரி இருக்கும்வரை சமஷ்டிக்கே இடமில்லை!

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தேசிய பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.

அதற்கான ஏற்பாடுகளையும் நாம் செய்துகொண்டு போகின்றோம். அதற்காக புதிய அரசமைப்பைக் கொண்டு வரும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெறுகின்றன.

இந்த முயற்சியைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் விரைவாக இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. நாட்டை இரண்டாகப் பிரிக்கப் போகின்றோம் என்றும், சமஷ்டியை வழங்கப் போகின்றோம் என்றும் போலிப் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுகூட உண்மை இல்லை. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது.

ஒற்றையாட்சிக்கு அப்பால் ஒருபோதும் செல்லமாட்டோம். பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முன்னுரிமை நீக்கப்படாது.

தீர்வு என்பது இந்த நாட்டின் அனைத்து மக்களின் விருப்பத்தைப் பெற்றதாக இருக்க வேண்டுமே தவிர வெறுப்பைப் பெற்றதாக இருக்க முடியாது.

குறிப்பாக, தெற்கின் இணக்கம் முக்கியம். அனைத்து இன மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய வகையில்தான் தீர்வு அமையும்.

சர்வதேசத்துக்கு அடிபணிந்தோ அல்லது வேறு சக்திகளுக்கு அடிபணிந்தோ நாம் இந்த நாட்டைக் கூறுபோடமாட்டோம் காட்டிக்கொடுக்கமாட்டோம். அரசைக் கவிழ்ப்பதற்கு சதி செய்பவர்களின் பேச்சைக் கேட்டு மக்கள் ஏமாறக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.