அதிமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினேனா? தீபா ஆவேசம்!

அதிமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் தவறானது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மறுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரரின் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு அதிமுக தொண்டர்கள் பலர் அழைப்பு விடுத்துள்ளனர். அவ்வப்போது அவர் வீட்டின் முன்பு கூடி தீபாவை அரசியலுக்கு வருமாறு கூறுகிறார்கள்.

தினமும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் தீபா வீட்டுக்கு முன்பு குவிகிறார்கள். தினமும் மாலையில் தொண்டர்கள் மத்தியில் பேசுவருகிறார். இதற்கிடையே அதிமுக மேலிட தலைவர்கள் சிலருடன் தீபா ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும் அவர்களை தீபா பேரவைக்கு இழுக்க முயற்சிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து தீபா கூறுகையில், நான் நானாகவே இருக்கிறேன். நான் அதிமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் தவறு. அடிப்படை ஆதாரமற்றது.

தினமும் எனது வீட்டின் முன்பு ஏராளமான தொண்டர்களை பார்க்கிறேன். என்னை நம்பி வரும் அவர்களுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். அதே நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை வந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது. தற்போது அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறேன் என்றார்.