கேரளாவை சேர்ந்த லோக்சபா உறுப்பினர் இ. அகமது, நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசு தலைவர் உரை நிகழ்ந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், இன்று அதிகாலை இறந்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரான அகமது, கேரளாவின் தெல்லிச்சேரியிலுள்ள அரசு பிரென்னன் கல்லூரியில் இளங்கலை படிப்பும், திருவனந்தபுரம் அரசு சட்ட கல்லூரியில் சட்டப் படிப்பில் பட்டமும் பெற்றார்.
1967, 1977, 1980, 1982 மற்றும் 1987ம் ஆண்டுகளில் கேரள சட்டசபையில் எம்.எல்.ஏவாக பணியாற்றியுள்ளார். 1982லிருந்து 1987 வரை கேரள மாநில அரசில் தொழில்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
1991, 1996, 1998, 1999, 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் லோக்சபா எம்.பியாக பணியாற்றினார். 2004-2009க்கு இடைப்பட்ட ஆண்டில் இவர் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். போலவே 2009 முதல் 2011 ஜனவரி வரை ரயில்வே இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
நீண்ட நெடிய அரசியல் பயணம் அவருடையது. சிறந்த நாடாளுமன்றவாதியாக பணியாற்றியுள்ளார். 78 வயதாகும் அகமது தற்போது மலப்புரம் தொகுதி எம்.பியாக பணியாற்றி வந்தார்.