தடை விதித்தாலும் தாக்குதல் தொடரும் : டிரம்புக்கு ஐ.எஸ் தீவிரவாதக் குழு மிரட்டல்

அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை பிறப்பித்தார்.
மேலும், உள்நாட்டுப் போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்த அதிபர் டிரம்ப், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
டொனால்டு டிரம்பின் அதிரடி உத்தரவுகள் அமெரிக்க மக்கள், உலக நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிரம்பின் நடவடிக்கைக்கு பல நாடுகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ‘டெலிகிராம்’ எனும் தகவல் தொடர்பு செயலி வழியே கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில், “டிரம்பின் உத்தரவுகள் எந்தப் பலனையும் தரப்போவது இல்லை, அமெரிக்காவிற்கு வெளியே இருந்து வந்து யாரும் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்தப் போவதில்லை. அமெரிக்காவில் பிறந்த, அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர்களை கொண்டு தான் அமெரிக்காவை தாக்குவோம்.
அமெரிக்காவுக்குள் வருவதற்கு முஸ்லீம்களுக்கு தடை விதித்து விட்டு, ஈராக், சிரியா மற்றும் ஏமன் நாடுகளில், டிரம்ப் முஸ்லீம்களை கொன்று குவித்து வருகிறார். இது ஐ.எஸ் இயக்கத்தினருக்கு மறைமுகமான சேவை என்பது டிரம்புக்கு தெரியாது. அவரை எதிர்த்து இப்போதே மக்கள் வீதிக்கு வர தொடங்கிவிட்டனர். கடவுளின் விருப்பப்படி அமெரிக்காவை அவர் கீழ் நோக்கி இழுத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை” என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.