இலங்கை வாழ் மக்களுக்கு, குறிப்பாக மின்சாரத்தினை பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, மின் இணைப்பின் போது செலுத்தும் காப்பு வைப்பு பணத்திற்கு உரிய வட்டியினை நுகர்வோருக்கு செலுத்துவதற்குரிய வழிகாட்டல் ஆவணத்தினை தயாரித்துள்ளது.
2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க மின்சார சபையின் சட்டத்தின் 28ஆம் சரத்தின் படி “மின் இணைப்பினை பெரும்போது நுகர்வோர் செலுத்திய காப்பு வைப்பு பணத்திற்கு ஒரு கொடுப்பனவினை பெறுவதற்கு அந்த நுகர்வோர் உரிமையானவர்.
இதன்படி மின் விநியோகம் செய்யும் அமைப்புக்கள் தம்மிடத்தில் அந்த வைப்பு பணத்தினை வைத்திருக்கும் காலம் முழுவதும் அந்த காப்பு பணத்திற்கான வட்டியை நுகர்வோருக்கு வழங்க வேண்டிய கட்டுப்பாட்டினை கொண்டுள்ளன.
குறித்த வட்டி வீதத்தினை வரையறுக்கும் அதிகாரம் இலங்கை பொதுப்பன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.”
அதற்கமைவாக இந்த வட்டிக்குரிய தொகையானது ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு அடுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நுகர்வோர் செலுத்த வேண்டிய மின் கட்டண தொகையில் இருந்து கழிக்கப்படும்.
பாரிய அளவில் மின்சாரத்தை பெற்று உபயோகிக்கும் வடிக்கையாளர்களுக்கான வட்டி தொகை மாத அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதத்தில் மின்சார கட்டணத்தில் இருந்து கழித்து கொடுக்கப்படும்.
மேலும் மின் இணைப்பினை நிறுத்திக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில், காப்பு வைப்பு பணத்தினை திரும்ப வழங்கும் போது, நிறுத்தி கொள்ளும் தினம் வரைக்கும் வட்டியினை வழங்க வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின் சேவை வழங்குநர்களை அறிவுறுத்தியுள்ளது.