அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன்று ஓதுவார் முன்.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்த வேலுண்டே துணை.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே.
ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!