6 வருடத்திற்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் அபிநவ் முகுந்த்!

வங்காள தேச அணிக்கெதிரான ஒரேயொரு போட்டிக்கான டெஸ்டிற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் மூன்று வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய் மற்றும் அபிநவ் முகுந்த் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதில் 27 வயதாகும் அபிநவ் முகுந்த் சுமார் 6 வருடத்திற்கு முன் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்திய அணி 2011-ல் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது கிங்ஸ்டனில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். இதில் முதல் இன்னிங்சில் 11 ரன்னும், 2-வது இன்னிங்சில் 25 ரன்னும் எடுத்தார். இந்த போட்டியில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பார்படோஸில் நடைபெற்ற 2-வது போட்டியின் முதல் இன்னிங்சில் 1 ரன்னும், 2-வது இன்னிங்சில் 48 ரன்னும் சேர்த்தார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. 3-வது போட்டியின் முதல் இன்னிங்சில் 62 ரன்கள் சேர்த்தார். அதன்பின் லார்ட்சில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 49 ரன்களும், 2-வது இன்னிங்சில் 12 ரன்களும் எடுத்தார். நாட்டிங்காமில் நடைபெற்ற போட்டியில் 3 ரன்கள் சேர்த்தார். அதன்பின் இந்திய அணியல் அவர் இடம்பெறவில்லை.

2016-17 ரஞ்சி டிராபி சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.