மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கான்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்திலும் நாக்பூரில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் பெங்களூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட், தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் (4-0) மற்றும் ஒரு நாள் தொடரை (2-1) கைப்பற்றி இருந்தது.
தற்போது 20 ஓவர் தொடரையும் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் டெஸ்ட், ஒரு நாள் தொடரை இழந்த இங்கிலாந்து அணி 20 ஓவர் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது.
இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் தொடரை வெல்ல போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டியிலும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையை கொண்டு வர வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் ஜோரூட் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாக்பூர் போட்டியில் எனக்கு கொடுக்கப்பட்ட எல்.பி.டபிள்யூ மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இது மாதிரி சில சமயம் நடக்கலாம். அதற்காக நான் நடுவரை குற்றம்சாட்ட விரும்பவில்லை. இதற்கு தீர்வு ஏற்பட 20 ஓவர் போட்டியிலும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாக்பூரில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் பும்ரா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜோரூட் எல்.பி.டபிள்யூ ஆனார். அவருக்கு கொடுக்கப்பட்ட எல்.பி.டபிள்யூ மிகுந்த சர்ச்சையானது. பந்து மட்டையின் விளிம்பில் பட்டுதான் காலில் விழுந்தது. டெலிவிஷன் ரீபிளேயில் தெளிவாக தெரிந்தது. இந்த அவுட் ஆட்டத்தின் போக்கை மாற்றி இங்கிலாந்து தோல்வி அடைய காரணமாக அமைந்தது.
இதனால் தான் டி.ஆர்.எஸ். முறையை கொண்டு வர வேண்டும் என்று இங்கிலாந்து வலியுறுத்துகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் 20 ஓவர் போட்டியிலும் டி.ஆர்.எஸ். முறையை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.
ஜோரூட்க்கு அவுட் கொடுத்த நடுவர் சம்சுதீன் கூறும் போது எதிர்காலத்திலும் நான் நடுவராக தொடர்ந்து பணியாற்ற எந்த பிரச்சினையும் இல்லை. வீரர் எப்படி ஒரு தவறு செய்கிறாரோ அது போலதான் நடுவரும். தவறு செய்து வருகிறார். டி.ஆர்.எஸ். முறை சிறந்தது தான். ஒரு அணிக்கு ஒரு மறு ஆய்வு கொடுக்கலாம் என்றார்.