குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவதாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்டக்சியினர் அமைச்சருக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
கூட்டு எதிர்க்கட்சியினால் எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.
எந்தவிதமான சட்ட விரோத கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுடபவில்லை.
எனக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு வேறு, ஊடகங்களில் கூறிய தகவல்கள் வேறு.எனக்கு எதிராக முறைப்பாடு செய்வது யார்?
மஹிந்தானந்த அலுத்கமகே.அவரைப் பற்றிய விபரங்களை அவரது மனைவியே நாட்டுக்கு அம்பலப்படுத்தியிருந்தார்.
சைக்கிளில் சென்ற மஹிந்தானந்த எவ்வாறு கோடீஸ்வரராக மாறியுள்ளார்.அதை பற்றிய விபரங்களை அவரது மனைவி நாட்டுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
கள்வர்களிலும் கள்வர்கள் இணைந்தே களவுகளை கண்டு பிடிக்க முயற்சிக்கின்றனர்.நான் நெல் விற்பனைச் சபையில் களவெடுக்கவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன்.எனக்கு எதிரான குற்றச்சாட்டை விரைவில் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் கோருகின்றேன் என ஹரிசன் தெரிவித்துள்ளார்.
நெல் விற்பனை சபையின் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், அரசாங்கத்திற்கு 360 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகவும் ஹரிசன் மீது கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.