பிரதமர் மோடி முதல் முறையாக இஸ்ரேல் செல்கிறார்!

பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்பு பல்வேறு உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாடுகளுடனான நட்புறவு, தொழில் வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக இந்திய தலைவர்கள் செல்லாத நாடுகளுக்கும் சென்று வருகிறார்.

அடுத்த கட்டமாக பிரதமர் மோடி இஸ்ரேல், ரஷியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அவரது பயணம் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி இஸ்ரேல் சுற்றுப்பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தியா-இஸ்ரேல் நல்லுறவின் 25-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி நரேந்திரமோடி இஸ்ரேல் செல்கிறார். அந்த நாட்டுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் இஸ்ரேல் நிறுவனம் உற்பத்தியை மேம்படுத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

இந்தியா-இஸ்ரேல் நல்லுறவு கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பிரணாப் முகர்ஜி அழைப்பை ஏற்று இஸ்ரேல் ஜனாதிபதி ருவென் ரிவ்லின் கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி இஸ்ரேல் செல்லும் முன் ரஷியாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். ஜூன் மாத தொடக்கத்தில் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் அவர் ரஷியா செல்வார் என்று தெரிகிறது.

ஜூன் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பாக் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.