தென் கொரியாவின் அதிபர் பார்க் கியுன் ஹை, தனது நெருங்கிய தோழி சோய் சூன் சில்லுடன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
இதன் காரணமாக அவர் 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு விசாரணை நடக்கிறது. அதன் முடிவில், பார்க் கியுன் ஹை பதவி இழப்பாரா அல்லது நீடிக்க அனுமதிக்கப்படுவாரா என தெரியவரும். இருப்பினும் அவர் பதவி நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அதிபர் தேர்தலை அந்த நாட்டினர் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.
அங்கு அதிபர் தேர்தலில் ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் பான் கி மூன் நேற்று சியோலில் திடீரென நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியை விட்டு விடுவது என நான் முடிவு செய்து விட்டேன்” என கூறினார். இது அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கான சூசக அறிவிப்பு என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே நடந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரை விட பான் கி மூன் பின் தங்கினார். இந்த நிலையில் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.