அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், பாலஸ்தீனத்தில் மக்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதை போன்று எமது மக்களும் சீற்றம் கொள்வார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுவது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவது போன்றுள்ளதென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. அவ்வாறான எண்ணம் உடையவர்கள் யாராயினும் அதற்கு இடமளிக்கமாட்டோம். கட்சி தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றேன்.
சுமந்திரனிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்களிடம் என்ன பொருட்கள் மீட்கப்பட்டன, .இந்நிலைமைகள் குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்து வாழ வழியில்லாமல் போராடி கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளிடம் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கூறி அவர்களை மீண்டும் போராட்டங்களுக்குள் தள்ள வேண்டாம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சரே பொறுப்புவாய்ந்த பதிலை கூறவேண்டும்.
12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்து வாழ வழியில்லாமல் காணப்படுகின்றார்கள். இவர்களுக்கு தொடர் தொல்லைகள் கொடுத்தால் இன்னும் 5 வருடங்கள் அல்லது 10 வருடங்களுக்குள் போராட்டம் வெடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
அவ்வாறான நிலமைக்கு முன்னாள் போராளிகளை தள்ள வேண்டாம். எதுவும் வேண்டாம் என இருக்கும் மக்களை மீண்டும் தூண்ட வேண்டாம்.
ஆனால், “இன்று இல்லை என்றால் என்றுமே இல்லை” என நினைக்க வேண்டாம் என அரசிற்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம். பாலஸ்தீனத்தில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதைப் போன்று இங்கும் போராட்டம் வெடிக்க கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.
முன்னாள் போராளிகளையோ அல்லது மக்களையோ துன்புறுத்தலுக்கு ஆளாக்கினால் மக்களின் சீற்றத்திற்கு ஆளாக வேண்டி வரும்.
மேலும் ஐந்து அம்சகோரிக்கையினை முன்வைத்து சுதந்திர தினத்தன்று யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.
இலங்கையின் 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் விடயம் பதில் கூறு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். மீளக் காணிகள் சுவீகரிக்கப்படக் கூடாது, இனப்படுகொலைக்கு நீதி, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கை முன்வைத்து காலை 8 மணிமுதல் 10 மணிவரை அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.