தொடரை வென்றது மறக்க இயலாதது: டோனிக்கு கோலி பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி முத்திரை பதித்தது.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. ரெய்னா 45 பந்தில் 63 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), டோனி 36 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), யுவராஜ்சிங் 10 பந்தில் 27 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். மில்ஸ், ஜோர்டான், புளுங்கெட், பென்ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 16.3 ஓவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 75 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜோரூட் அதிகபட்சமாக 42 ரன்னும், மார்கன் 40 ரன்னும் எடுத்தனர். யூவேந்திர சஹால் 25 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். பும்ரா 3 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இந்தியா 5 ரன்னிலும் வெற்றி பெற்று இருந்தது.

ஏற்கனவே வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. தற்போது 20 ஓவரும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சஹால் பெற்றார்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது மறக்க இயலாத ஒன்றாகும். இந்த தொடரின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) சிறப்பாக செயல்பட்டோம்.

சீனியர் வீரர்களான டோனி, யுவராஜ்சிங் மற்றும் ஆசிஷ் நெக்ராவை பாராட்டுகிறேன். அவர்களது ஆலோசனைகளை நான் பெற்றேன். அவர்கள் மிகவும் புத்திசாலிகள் ஆவார்கள். எல்லா பாராட்டும் அவர்களைத்தான் சென்றடையும்.

நான்தான் டோனியை முன்னதாக களம் இறக்கினேன். அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. தொடரை முடிவு செய்யும் இந்த ஆட்டத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அவர் பங்கேற்ற முதல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டோனி விலை மதிப்பற்ற வீரர் ஆவார்.

பெங்களூர் மைதான ஆடுகளத்தன்மைக்கு ஏற்ற வகையில் சஹால் பந்து வீசினார். எப்படி பந்து வீச வேண்டும் என்பதை நன்கு அறிந்தார். நான் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அதற்கு ஏற்ற வகையில் மிகவும் திறமையாக பந்து வீசினார். அவரது பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது.

ஜோர்டான் ஓவரில் யுவராஜ் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றி 200 ரன்களை குவிக்க காரணமாக அமைந்தார். 200 ரன்னுக்கு மேல் தாண்டியது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஐ.பிஎல்.லில் விளையாடிய சுறுசுறுப்பும் பெங்களூர் ஆடுகளத்தில் கை கொடுத்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் மார்கன் கூறும்போது, “தொடரை வெல்ல இந்தியா தகுதியான அணிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சஹால் அபாரமாக பந்து வீசினார். நாங்கள் செய்த பிழையால் தொடரை இழந்தோம்” என்றார்.

இந்திய அணி அடுத்து வங்காளதேசத்துடன் ஒரே ஒரு டெஸ்டில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் வருகிற 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.