2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் வழங்க இருக்கும் பதக்கங்கள் பழைய ஸ்மார்டபோன் மூலம் தயாரிக்கப்பட இருக்கிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட இருக்கும் பதக்கங்களை பழைய தொழில்நுட்ப சாதனங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த இருப்பதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
முன்னதாக பழைய ஸ்மார்ட்போன் மற்றும் சிறிய சாதனங்களை மறுசுழற்சி செய்து பதக்கங்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி சுமார் 5000 பதக்கங்கள் இம்முறையில் தயாரிக்கப்படும் என செய்திகள் வெளியாகின.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பதக்கங்களை தயாரிக்க தேவையான உலோகங்களை சேகரிக்க ஜப்பான் முழுக்க பழைய சாதனங்களை சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற 2012 ஒலிம்பிக் போட்டிகளில் 9.6 கிலோ தங்கம், 1210 கிலோ சில்வர் மற்றும் 700 கிலோ செம்பு பதக்கங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு ஜப்பான் 143 கிலோ தங்கம், 1566 கிலோ சில்வர் மற்றும் 1112 டன் செம்பு உள்ளிட்டவற்றை மின்சாதனங்களில் இருந்து ஜப்பான் அகற்றியது. இதில் ஒரு பங்கு 2020 போட்டிகளில் பதக்கங்களுக்காக பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினசரி பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும், பூமியில் கிடைக்கும் வளங்களுக்கும் ஒரு எல்லையுண்டு, இதனால் பொருட்களை மறுசுழற்சி செய்வது சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்வதாக இருக்கும் என ஜப்பானின் விளையாட்டு துறை தலைவர் தெரிவித்துள்ளார்.