முரட்டு உடம்புடன் அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57-வது படமாக உருவாகிவரும் படத்துக்கு சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு தலைப்புகளை வைத்து ரசிகர்கள் யூகங்களை கிளப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தலைப்பும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், இந்த படத்தின் தலைப்பின் முதல் எழுத்தும் ‘V’ என்ற ஆங்கில எழுத்து முதலில் வரும்படிதான் தலைப்பு இருக்கும் என்று ஆணித்தரமாக கூறப்பட்டது.

அப்படி கூறப்பட்ட தலைப்புகளில் ‘விவேகம்’ என்ற தலைப்பையே படக்குழுவினர் இறுதியாக முடிவு செய்து வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 2-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடப்போவதாக அறிவித்தனர். அதன்படி, இன்று அதிகாலை 12 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் எல்லோரும் நினைத்ததுபோல் ‘விவேகம்’ என்றே படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். மேலும், அஜித் தனது முரட்டு உடம்பை காட்டியபடி, மேல் சட்டை அணியாமல் ராணுவ பேண்ட் அணிந்து காட்சியளிக்கிறார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் இந்த போஸ்டருக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.