ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. பேச்சு

பாராளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவை இன்று நடைபெற்றது.

இந்நிலையில், அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த்  மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் பேசும்போது, “அம்மாவுக்கு (ஜெயலலிதா) யாரும் ஈடாக முடியாது. அன்பும் கருணையும் கொண்ட அவர், ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக தனது கடைசி மூச்சுவரை ஓய்வின்றி உழைத்தவர். தமிழகத்தின் இரும்புப் பெண்மணியான அவர், அனைத்து விதமான வளர்ச்சிக்கும் வழிவகுத்தவர்.

அம்மாவின் அறிவுத் திறனுக்கும் நிர்வாகத் திறனுக்கும் இணையாக உலகில் எந்தத் தலைவர்களுமே இல்லை. முன்னுதாரணமாக விளங்கும் அவரது 32 ஆண்டு கால பொது வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும். அத்துடன், நாடாளுமன்றத்தில் அவருக்கு வெண்கல சிலை நிறுவவேண்டும். நோபல் பரிசுக்கு அவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும்” என்றார்.