உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட்சபைகளுக்கான தேர்தல் வரும் 4-ம் தேதி முதல் தொடங்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகவும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சங்கூர் என்ற இடத்தில் இன்று பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, அங்கிருந்த மக்களுடன் அமர்ந்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அங்கு நடந்த பொது விருந்தில் கலந்து கொண்ட அவர், மக்களோடு தரையில் அமர்ந்து மதிய உணவு உண்டார்.
அங்கு கூடியிருந்த மக்களிடம், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்கும் எனவும், சர்வதேச தரத்திலான புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் ராகுல் காந்தி கூறினார். மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டி விடுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.