போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடு. இப்போது அவசியமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதும், காணாமல் போனோருக்கான பணியகமும் தான்.
இவை நடைமுறைக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களுக்கு தேவை இருக்காது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்று மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி பரிந்துரைத்துள்ளது.
இதுபற்றிக் கருத்து வெளியிடுவதற்கு அவர்களுக்கு உரிமையில்லை.
பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் பணியே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அது தான் அந்தக் குழுவின் பொறுப்பு.
அவர்களின் சொந்த கருத்துக்களும் கூட அந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.